ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி


ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Nov 2019 9:45 PM GMT (Updated: 1 Nov 2019 7:12 PM GMT)

க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் அஞ்சூர் கார்வழி ஊராட்சி இடையே ஆத்துப்பாளையம் அணை உள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 26.9 அடியும், நீளம் 9,350 அடியும் ஆகும். இங்கு 235 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் வரும் உபரி நீர் திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் என்னுமிடத்தில் மதகணை மூலம் திறக்கப்பட்டு முத்தூர் வழியாக ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. மேலும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் வரும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பட்டது போக மீதி வரும் நீர் இந்த அணைக்கு வருகிறது. இந்த அணையின் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, முன்னூர், குப்பம், புன்னம் ஊராட்சி மற்றும் கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் 19 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலை 1997-ம் ஆண்டு வரை தான் நீடித்தது. அதன்பிறகு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நொய்யல் ஆற்றில் கலந்து விட்டனர். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆத்துப்பாளையம் அணைக்கு வரும் நீரை கதவணை மூலம் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரூர் மாவட்டம், கோம்புபாளையம் ஊராட்சி நொய்யல் ஆற்றுநீர் செல்லாண்டிஅம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் சுத்தமான நீருடன் கலந்து வருகிறது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூரில் உள்ள மதகணையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறந்து விட்டனர்.

இதனால் நொய்யல் ஆற்று உபரிநீர் ஆத்துப்பாளையம் அணைக்கு வந்தடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஆத்துப்பாளைம் அணையின் நீர்மட்டம் 20.6 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 122 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ளதால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாய பணிகளுக்கு உதவிகரமாக ஆத்துப்பாளையம் அணைநீர் அமையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story