சிலிண்டரை வெடிக்கச் செய்து மகள்களுடன் டீக்கடைக்காரர் சாவு: கள்ளக்காதலை கைவிடாத மனைவி கைது


சிலிண்டரை வெடிக்கச் செய்து மகள்களுடன் டீக்கடைக்காரர் சாவு: கள்ளக்காதலை கைவிடாத மனைவி கைது
x
தினத்தந்தி 2 Nov 2019 4:45 AM IST (Updated: 2 Nov 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து மகள்களுடன் டீக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்காதலை கைவிடாத அவருடைய மனைவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பரபரப்பு தகவல்களும் தெரியவந்தன.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு பிரதீபா (8), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள்.

இந்த நிலையில் கீதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரியவந்ததும் கருப்பையா தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இது குறித்து கருப்பையா உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கீதா தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்பையா 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

மனைவி வேறு ஒரு வாலிபருடன் பழக்கத்தில் இருந்ததால் அவமானம் அடைந்த கருப்பையா தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். மேலும் தனது மகள்களை விட்டுச் சென்றால் அவர்கள் அனாதையாக ஆகி விடுவார்களோ? என்று நினைத்த கருப்பையா அவர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் தனது மகள்களை பள்ளிக்கு அனுப்பாமல் தனது டீக்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதன் பின்னர் அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்கச் செய்ததில் கருப்பையா மற்றும் அவருடைய 2 மகள்களும் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி கீதா, அவருடைய கள்ளக்காதலன் ஆனந்தகுமார், இவருடைய தந்தை கருப்பையா, தாய் சொர்ணம், சகோதரி அபிராமி, கீதாவின் தந்தை பெரியகருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கீதா, பெரியகருப்பன், மலைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கருப்பையா மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆனந்தகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி, கருப்பையா உள்பட 3 பேர் உடல்களை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் நேற்று மதுரை-தேனி சாலையில் தொட்டப்பநாயக்கனுார் விலக்கில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் (பொறுப்பு) வினோதினி, ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், தினகரன், வனிதா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்கொலைக்கு காரணமான மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் மதுரை- தேனி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிலிண்டரை வெடிக்க வைத்து மகள்களுடன் கருப்பையா உயிரிழந்தது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கள்ளக்காதலை கீதா கைவிடாததால் கணவர் கருப்பையா மனவேதனை அடைந்துள்ளார். அதனால்தான் மகள்களை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை தேடியுள்ளார். எனவே அவரை இந்த விபரீத முடிவை தேடிக்கொள்ள தூண்டியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் கீதா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

Next Story