திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை, ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கியது


திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை, ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 2 Nov 2019 3:30 AM IST (Updated: 2 Nov 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

மலைக்கோட்டை,

சீர்மிகு நகரம் எனப்படும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் ரூ.17 கோடியே 34 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து சத்திரம் பஸ் நிலையத்தில் கடை வைத்து உள்ள 56 வியாபாரிகள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சீரமைக்கும்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பணியை தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் தயாரானார்கள். அப்போது வியாபாரிகள் தரப்பில் தீபாவளி பண்டிகை வரை கால அவகாசம் அளிக்கும்படியும், தீபாவளி முடிந்த பின்னர் கட்டுமான பணியை தொடங்கும் படியும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தீபாவளி முடிவடைந்ததை தொடர்ந்து சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து கொடுக்கும்படி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீசு வினியோகம் செய்தனர். இதனை ஏற்று சில வியாபாரிகள் கடைகளை மூடினர். மற்ற வியாபாரிகளும் விரைவில் கடைகளை காலி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது.

முதல் கட்டமாக நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தில் குழிதோண்டி தூண்கள் அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பணி நடைபெறும் பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளையும் மாநகர போலீசார் செய்து வருகிறார்கள். தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட உள்ள இந்த பஸ் நிலையத்தில் சீரமைப்புக்கு பின்னர் ஒரே நேரத்தில் 30 பஸ்களை நிறுத்தி வைப்பதற்கும், 350 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story