தனியார் கம்பெனியில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீரை ஏரியில் விட பொதுமக்கள் எதிர்ப்பு


தனியார் கம்பெனியில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீரை ஏரியில் விட பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 10:15 PM GMT (Updated: 2019-11-02T01:45:12+05:30)

தனியார் கம்பெனியில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீரை ஏரியில் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள் இயங்கி வருகிறது. அவற்றில் சில கம்பெனிகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர் தண்ணீர் குளம் பகுதியில் உள்ள ஏரியில் விடப்படுகிறது. ஏரியின் தண்ணீர் மாசுபட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

அந்த ரசாயனம் கலந்த கழிவு நீரை குடிக்கும் கால்நடைகளும் இறக்கும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக காக்களூர் சிட்கோ பகுதியில் மழைநீர் தனியார் கம்பெனிகளை சூழ்ந்தது. மேலும் மழை நீரானது இந்த ரசாயனம் கலந்த கழிவு நீருடன் கலந்து நிரம்பி காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து காக்களூர் சிட்கோ பகுதியில் மழைநீரை வெளியேற்ற அவர்கள் முடிவு செய்தனர். அப்போது இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து தண்ணீர்குளம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தேங்கி கிடந்தது. இதனை தனியார் கம்பெனி நிர்வாகிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் விடும் பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர்குளம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ (பொறுப்பு) பெருமாள், திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், காக்களூர் சிட்கோ கிளை மேலாளர் கவிதா, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் காக்களூர் சிட்கோ பகுதியில் உள்ள தேங்கிய மழை நீரை மட்டும் தண்ணீர்குளம் ஏரியில் விட முடிவு செய்து கால்வாயை சீரமைத்தனர். அதன் மூலமாக மழைநீர் தண்ணீர்குளம் ஏரிக்கு சென்றது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story