குளம் போல் காட்சி அளிக்கும் சாத்தியார் அணை - பாசன விவசாயிகள் கவலை


குளம் போல் காட்சி அளிக்கும் சாத்தியார் அணை - பாசன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 2 Nov 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நீர் வரத்து இன்றி குளம் போல் காட்சி அளிப்பதால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அலங்காநல்லூர்,

மதுரை பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணைக்கு வகுத்துமலை, மஞ்சமலை, செம்பூத்துமலை மற்றும் சிறுமலை தொடர்ச்சி போன்ற மலைகளில் இருந்து பருவ மழை காலங்களில் நீர் வருவது வழக்கம். இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை இந்த பகுதியில் பொய்த்து விட்டது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் சாத்தியார் அணையின் நீர் வரத்து பகுதியில் தேவையான அளவு பெய்ய வில்லை. இதனால் நீர் வரத்து இல்லை.

அணைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் நீர் மட்டம் தற்போது வரை ஒரு அடி கூட உயராமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த அணையை நம்பி உள்ள கீழச்சின்னம்பட்டி, எர்ரம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 10 கிராம கண்மாய் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் இந்த அணை நிரம்பாத காரணத்தினால் சுமார் 2500 ஏக்கர் வரை வறண்டு கிடக்கிறது.

இது குறித்து பாசன விவசாயி இடையபட்டி நடராஜன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு அணைகள் நிரம்பி அந்தப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சாத்தியார் அணை தற்போது வரை நிரம்பாமல் உள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 29 அடி ஆகும்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த அணையின் பாசனப்பகுதியில் மட்டும் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்த ஆண்டாவது அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்“ என்றார்.

Next Story