தண்ணீர் பேரலில் விழுந்து சிறுமி பலி, விளையாடி கொண்டிருந்த போது பரிதாபம்


தண்ணீர் பேரலில் விழுந்து சிறுமி பலி, விளையாடி கொண்டிருந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 2 Nov 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி தண்ணீர் பேரலில் விழுந்து பலியானாள்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி என்ற செல்வபாண்டியன். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவருடைய மனைவி ரம்யா. இவர் வெங்கடசமுத்திரம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். இவர்களில் 2-வது குழந்தை யுவந்திகா (வயது 4). நேற்று காலை செல்வபாண்டியன் வெளியில் சென்றுவிட்டார். ரம்யாவும் வேலைக்கு சென்றார். இதனால் யுவந்திகா அவருடைய பாட்டி விஜயாவின் பாதுகாப்பில் இருந்தாள். பாட்டி விஜயா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி யுவந்திகா அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள்.

விஜயா துவைத்த துணிகளை காயப் போடுவதற்காக சென்றார். இந்த நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த யுவந்திகா துணி துவைத்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பேரலை எட்டி பார்த்துள்ளாள். அப்போது பேரலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டாள். துணியை காயப்போட்டு விட்டு திரும்பிய விஜயா, சிறுமி தண்ணீரில் மூழ்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக யுவந்திகாவை தூக்கிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள், சிறுமி யுவந்திகாவை பரிசோதித்து பார்த்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story