எஸ்டேட் பகுதியில் 13 நாட்களாக தவிப்பு: காலில் அடிபட்ட குட்டியுடன் நிற்கும் தாய் யானை - தீவிர சிகிச்சை அளிக்க கோரிக்கை


எஸ்டேட் பகுதியில் 13 நாட்களாக தவிப்பு: காலில் அடிபட்ட குட்டியுடன் நிற்கும் தாய் யானை - தீவிர சிகிச்சை அளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 2 Nov 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை எஸ்டேட் பகுதியில் 13 நாட்களாக காலில் அடிபட்ட குட்டியுடன் தாய் யானை தவித்தபடி நிற்கிறது. ஆகவே தீவிர சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள நல்லமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டியானைக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போனது. இதனால் அந்த யானை கடந்த 13 நாட்களாக அங்கேயே நின்று தவித்துக் கொண்டிருக்கிறது. குட்டிக்கு பாதுகாப்பாக தாய் யானையும் அங்கிருந்து செல்லாமல் பாசப்போராட்டம் நடத்துகிறது. இதற்கிடையில் அங்கிருந்த மற்ற யானைகள் தோனிமுடி எஸ்டேட் பகுதிக்கு சென்று முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் ஆபத்தான நிலையில் அவதிப்படும் குட்டி யானைக்கு உரிய சிகிச்சையளித்து பாதுகாக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனரும், மாவட்ட வனஅலுவலருமான மாரிமுத்து தலைமையில், வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசு, யானை ஆராய்ச்சியாளர் கணேஷ் மற்றும் வனத்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன், நல்லமுடி எஸ்டேட் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வால்பாறை அரசு கால்நடை டாக்டர் உதவியுடன் காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் இருந்து வரும் குட்டியானைக்கு வலி நிவாரணத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்க முடிவு செய்தனர். ஆனால் குட்டியானையிடம் நேரடியாக சென்று வழங்க முடியாது என்பதால், குட்டி யானைக்கு பால் கொடுத்து வரும் தாய் யானைக்கு வாழைப்பழத்தில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர். தாய் யானை மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதன் மூலம் பால் கொடுக்கும்போது குட்டியானைக்கு அந்த மருந்து போய் சேரும் என்று டாக்டர் கூறினார். இந்த நிலையில் மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்ட பலாப்பழத்தை தாய் யானை சாப்பிட்டது. குட்டியானைக்கும் பால் கொடுத்தது. ஆனால் 13 நாட்கள் ஆகியும் இன்னும் குட்டியானை வேறு இடத்துக்கு நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. காலில் அடிபட்ட காயம் பூரணமாக குணமாகாததால் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. இதனால் தாய் யானையும் அந்த இடத்தை விட்டு செல்லாமல் உள்ளது.

இது குறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறியதாவது:-

தாய் யானைக்கு குட்டியானைக்கும் சேர்த்து பலாப்பழத்தில் மாத்திரை கொடுக்கப்பட்டது. இருப்பினும் குட்டியானையின் உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே குட்டியானைக்கு போர்க்கால அடிப்படையில் தீவிர சிகிச்சைஅளிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story