மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே, தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி + "||" + Near Palladam, Motorcycle collision on water truck; 2 killed

பல்லடம் அருகே, தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

பல்லடம் அருகே, தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
பல்லடம் அருகே தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 24). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மணிகண்டனும், இவருடைய நண்பர் அம்மாபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி அசோக்குமார் (29) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று பல்லடம் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நாரணாபுரம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். பின் இருக்கையில் அசோக்குமார் அமர்ந்து இருந்தார்.

இவர்களுடைய மோட்டார் சைக்கிள் பல்லடம்-மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் சென்றது. அப்போது எதிரே மங்கலத்தில் இருந்து பல்லடம் நோக்கி தண்ணீர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்த தண்ணீர் லாரி, அந்த பகுதியில் உள்ள வீதியில் செல்வதற்காக வலது புறம் திடீரென்று திரும்பியது. அப்போது தண்ணீர் லாரி மீது மோதாமல் இருக்க மணிகண்டன் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைக்க முயன்றார். ஆனால் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தண்ணீர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் மற்றும் அசோக்குமார் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகண்டன் மற்றும் அசோக்குமார் ஆகியோரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் 2 பேரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.