கடலூர், நகராட்சி அலுவலகத்தை பழ வியாபாரிகள் முற்றுகை - பஸ் நிலையத்தில் கடைகள் வைக்க இடம் ஒதுக்க கோரிக்கை
கடலூர் பஸ் நிலையத்தில் கடைகள் வைக்க இடம் ஒதுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பழ வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் பஸ் நிலையத்தில் சிறு பழ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் பல ஆண்டுகளாக கடை வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் கடை வைத்திருந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்றது. இதனால் பழ வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் கீழ் புறம் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் இலவச கழிவறை மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையில் வணிக வளாகம் கட்டி திறக்கப்பட்ட போது, அமைச்சர், அப்போதைய கலெக்டர், நகராட்சி ஆணையாளர் ஆகியோர் பழ வியாபாரிகளிடம், நீங்கள் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த இடம் உங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினர். ஆனால் அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த இடத்தில் வேறு சிலர் தற்போது கடைகள் வைத்து உள்ளனர்.
இது பற்றி பழ வியாபாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு மனுக்களை அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், சுப்புராயன் மற்றும் பழ வியாபாரிகள் சங்கம் சுகுமார் உள்பட நிர்வாகிகள், பழ வியாபாரிகள் கடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி நிர்வாகம் பழ வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தில் கடைகள் வைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டம் நடத்தியவர்கள், நகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், நகராட்சி அதிகாரிகளிடம் செல்போனில் பேசினார். அதன்பிறகு அவர், இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் நகராட்சி அதிகாரிகள், போலீசார் கலந்து கொள்வார்கள் என்றார். இதை கேட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள், கட்சி நிர்வாகிகள், பொது நல அமைப்பினர் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story