பா.ஜனதா அரசு கவிழ்ந்துவிடும்: இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற முடியாது - சித்தராமையா பேட்டி


பா.ஜனதா அரசு கவிழ்ந்துவிடும்: இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற முடியாது - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2019 4:21 AM IST (Updated: 2 Nov 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா அரசு கவிழ்ந்து விடும் என்றும், இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற முடியாது என்றும் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு முறைகேடான வழியில் அமைந்துள்ளது. அவர்களுக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 38.14 சதவீத வாக்குகளும், பா.ஜனதாவுக்கு 36.34 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பா.ஜனதாவை விட காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் இடங்களின் எண்ணிக்கையில் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற்றன.

பெரும்பான்மை கிடைக்காதபோதும், கவர்னர், பா.ஜனதா ஆட்சி அமைய அனுமதி வழங்கினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா மூன்றே நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.

ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க திட்டமிட்ட எடியூரப்பாவின் ஆடியோ உரையாடல் பதிவு வெளியானது. அதன் பிறகு 17 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அரசை பா.ஜனதாவினர் கவிழ்த்தனர்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் களின் தொகுதிகளுக்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குதிரை பேரம் நடத்தவில்லை என்றால், அவர்களின் தொகுதிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவது ஏன்?. இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று எடியூரப்பா சொல்கிறார். ஆனால் 15 தொகுதி யிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.

பா.ஜனதா குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பான்மையை பெற முடியும். இல்லாவிட்டால் இந்த அரசு கவிழ்ந்துவிடும். மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர். அதே நிலை தான் கர்நாடகத்திலும் ஏற்படும். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற முடியாது.

நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களின் கண்ணீரை துடைக்கும் வேலையை இந்த அரசு செய்யவில்லை.

மத்திய அரசுக்கு வழங்கிய அறிக்கையில் 2½ லட்சம் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆனால் இப்போது இந்த அரசு 97 ஆயிரம் வீடுகள் மட்டும் இடிந்ததாக கூறுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கூடாரங்களை மாநில அரசு அமைத்துள்ளது. அங்கு குடிநீர், கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

மத்திய அரசு, தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் சேர முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் பால் பண்ணை தொழிலை நம்பியுள்ள 10 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இடைத்தேர்தலில் டிக்கெட் ஒதுக்கீடு தொடர்பாக எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. கருத்துகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அது கருத்து வேறுபாடு கிடையாது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story