ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டம்: கர்நாடகத்தில் வசிக்கும் பிறமொழி பேசுவோர் கன்னடம் கற்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டம்: கர்நாடகத்தில் வசிக்கும் பிறமொழி பேசுவோர் கன்னடம் கற்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2019 11:03 PM GMT (Updated: 1 Nov 2019 11:03 PM GMT)

கர்நாடக அரசின் கல்வித்துறை சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

பெங்களூரு,

விழாவையொட்டி காலை 9 மணிக்கு தேசிய கொடியை முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்றினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா விழாவில் பேசியதாவது:-

“கன்னடம், அழகான மற்றும் வளமிக்க மொழி. நவீனத்தை உள்வாங்கி கொள்ளும் ஒரு உறுதியான மொழி. கன்னட மொழியை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவது அல்லது கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் வந்து குடியேறும் மக்கள், இங்குள்ள மொழி, கலாசாரம், வாழ்க்கை முறையை ஏற்று வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடத்தை மதிக்க வேண்டும். இத்துடன் பிற மொழி மக்கள் தங்களின் தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் வசிக்கும் கன்னடர்கள், அந்த மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை ஏற்று வாழ்கிறார்கள்.

இந்த விஷயத்தில் கன்னடர்கள் பிற மொழியினருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். பிற மொழியினர் கன்னடம் கற்று, அம்மொழி தெரியாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும். கன்னட நாடு, மொழி ஆகியவற்றை தன்னுடையது என்று கருதுபவர்கள் அனைவரும் கன்னடர்களே. கன்னடர்களின் விருந்தோம்பல் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. கன்னட நாடு, மொழி, நீர் விஷயங்களில் அபிமானம் இருக்க வேண்டும்.

இந்த அபிமானம் வெறும் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், நமது அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் கன்னட மொழி வளரும். கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில் சமரசத்திற்கு இடமில்லை. அறிவாளிகள், நிபுணர்கள், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று, வளர்ச்சியில் கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன். கல்வியின் தரத்தை உயர்த்தும் வகை யில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம், சீருடை, ஷூ, பால், மதிய உணவு, சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கர்நாடகத்தில் இயற்கை வளங்கள் இருக்கின்றன. வனப்பகுதி, பசுமை வனம், மலைகள், குன்றுகள், கடல் என அனைத்து வளங்களும் நிரம்பி இருக்கின்றன. கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்கு தேவைப்படும் மனித வளமும் நிரம்பி கிடக்கின்றன. இந்த நேரத்தில் கர்நாடக மக்கள் அனைவருக்கு ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் பேசுகையில், “கன்னட ராஜ்யோத்சவா விழாவில் தேசிய கொடியை மட்டுமே ஏற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய கொடியுடன் கர்நாடக கொடியும் ஏற்றப்பட்டு வருவது மரபாக பின்பற்றி வருகி றோம். தேசிய கொடிக்கு அவமதிப்பு ஏற்படாத வகையில் மாநில கொடியை ஏற்றுகிறோம். சிலர், மக்களிடையே குழப்பத்தை விளைவித்துள்ளனர். இது சரியல்ல. கர்நாடகத்தில் நிலம், நீர், மொழி, கலாசாரத்தை பாதுகாக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. இதில் சமரசத்திற்கு இடமில்லை“ என்றார்.

இந்த விழாவில் மேயர் கவுதம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பான குழுக்களுக்கு எடியூரப்பா பரிசு வழங்கினார். இந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கன்னட ராஜ்யோத்சவா விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பொறுப்பு மந்திரிகள் மற்றும் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத் தினர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Next Story