ஈரோட்டில், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை


ஈரோட்டில், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 1 Nov 2019 9:45 PM GMT (Updated: 1 Nov 2019 11:15 PM GMT)

ஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோவையில் இருந்து 2 கார்களில் சுமார் 10 அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றனர். இந்த தகவல் அலுவலகத்தின் பிற பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

10 மணி அளவில் அனைத்து பணியாளர்களும் உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் அவ்வப்போது வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். என்ன காரணத்துக்காக சோதனை நடக்கிறது என்று அதிகாரி ஒருவரிடம் நிருபர்கள் கேட்டபோது, அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்றார்.

இதுகுறித்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் அசோக்குமார். இவர் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் நாடு முழுவதும் கட்டுமான பணிகளை சுப்பிரமணியம் அசோக்குமார் செய்து வந்தார்.

இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் மீது விசாகப்பட்டினத்தில் ஒரு புகார் பதிவானது. அங்கு சரக்கு மற்றும் சேவை வரியில் மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது போலி பில்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் வரை சுமார் ரூ.450 கோடி அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் (அக்டோபர்) விசாகப்பட்டினத்தில் வைத்து சுப்பிரமணியம் அசோக்குமார் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதே நேரத்தில் பெருந்துறையில் உள்ள சுப்பிரமணியம் அசோக்குமாரின் சொந்த வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று மாலை வரை நடந்தது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Next Story