பாரதீய ஜனதா - சிவசேனாவின் நாடகத்துக்கு துணை போய் விடக்கூடாது காங்கிரஸ் தலைவர்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை


பாரதீய ஜனதா - சிவசேனாவின் நாடகத்துக்கு துணை போய் விடக்கூடாது காங்கிரஸ் தலைவர்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 12:34 AM GMT (Updated: 2 Nov 2019 12:34 AM GMT)

பாரதீய ஜனதா- சிவசேனா இடையேயான மோதல் ஆட்சி அதிகாரத்தில் அதிக பங்கு பெற நடத்தப்படும் நாடகம் என்பதால் அதற்கு துணை போய் விடக்கூடாது என காங்கிரஸ் தலைவர்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை,

சிவசேனா ஆட்சி அதிகாரத்தில் சரிபங்கு கேட்பதால் பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணி அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் ஆதரவு கேட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரதிவிராஜ் சவான் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர்.

அதன்பிறகு அவர்கள் கட்சி தலைமையிடம் பேச டெல்லி புறப்பட்டு சென்றனர். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தான் அவர்கள் சரத்பவாரிடம் பேசிவிட்டு, கட்சி தலைமையை சந்திக்க டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரிக்கும் வகையில் மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் அவா் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா - சிவசேனா மோதல் நாடகத்தில் காங்கிரஸ் துணை போய் விடக்கூடாது. இந்த நாடகம் போலியானது. ஆட்சி அதிகாரத்தில் அதிக பங்கினை பெற நடத்தப்படும் தற்காலிக சண்டை. அவர்கள் (பாரதீய ஜனதா - சிவசேனா) மீண்டும் சேர்ந்து நம்மை அவதூறாக பேசுவார்கள். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எப்படி சில காங்கிரஸ் தலைவர்கள் யோசிக்கலாம்?. நாம் தோற்றுவிட்டோமா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுதவிர சிவசேனா பாரதீய ஜனதாவின் நிழலை விட்டு வெளியே வராது. எனவே சிவசேனாவுடன் கொஞ்ச வேண்டியதில்லை. இது பயனற்று போகும். காங்கிரஸ் மாநில தலைவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் எனவும் 2 நாட்களுக்கு முன் சஞ்சய் நிருபம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story