மாவட்ட செய்திகள்

ஜப்பான் நாட்டு உதவியுடன்: ரூ.983 கோடியில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு + "||" + Plan to increase solar power generation Chief Minister Narayanasamy announces

ஜப்பான் நாட்டு உதவியுடன்: ரூ.983 கோடியில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

ஜப்பான் நாட்டு உதவியுடன்: ரூ.983 கோடியில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
ஜப்பான் நாட்டு கடன் உதவியுடன் புதுவையில் ரூ.983 கோடியில் சூரியமின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் விவசாயம் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. நமது மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சார்ந்துள்ளனர். மொத்த உற்பத்தி மதிப்பில் இதன் பங்களிப்பு 7 சதவீதம். வேளாண் உற்பத்தியை பெருக்க மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எங்கள் அரசு இயற்கை விவசாயத்தை பெரிதும் ஊக்குவித்து வருகிறது.


இதன்படி இயற்கை விவசாயம் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடங்கிய 22 திட்டங்களை ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதேபோல் சுற்றுலா துறையிலும் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளோம். மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.181 கோடிக்கு மேலாக பல்வேறு சுற்றுலா திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது. மணப்பட்டு, நரம்பை கடற்கரை பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் விதமாக கடற்கரையில் குடில்களை கட்டி விடுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களை மேம்படுத்த சுற்றுலா திட்டத்திற்காக ரூ.114½ கோடி மதிப்பில் திட்ட முன்வரைவுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்திற்கு நிதிஉதவிகோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம் மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும் பெருகி வரும் மின்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரியமின் உற்பத்தியை அதிகரிக்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் ரூ.983 கோடி உதவி பெற மத்திய மின்சார ஆணையம் தற்போது தொழில்நுட்ப அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரிக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்னூட்டம் மற்றும் மின் பங்கீட்டிற்கு நடப்பு நிதியாண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை ரூ.550 கோடியே 35 லட்சம் செலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. சூரியமின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு வீட்டு வளாகங்கள் மற்றும் மாடிகளில் சூரிய மின்உற்பத்தி செய்து வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை 3 ஆண்டுகளுக்கு முதல் வருகை, முதல் சேவை என்ற அடிப்படையில் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் மாநில மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறோம். இதற்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்களின் நலனை அரசு பேணிக்காக்கும். எங்கள் அரசு மக்கள் அரசு, மக்களுக்கான அரசு என்பதை கடந்த 3 ஆண்டுகளில் நிரூபித்து காட்டியுள்ளோம்.

காவல்துறையை வலுப்படுத்த தேசிய அவசர கால உதவித்திட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.3 கோடியே 23 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. கணினி இணையதள குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாத்தல் என்னும் திட்டத்தின் கீழ் இணையதள தடயவியல் ஆய்வக பயிற்சி மையம் ஏற்படுத்த மத்திய அரசு ரூ.1 கோடியே 48 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.

கடலோர பகுதிகளை பாதுகாக்க புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் தலா ஒரு கடலோர காவல்நிலையம் அமைக்கவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தலா ஒரு படகு குழாம் அமைக்கவும் மத்திய அரசு ரூ.2 கோடியே 44 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியில் இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. மாகியில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

புதுச்சேரி மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேற அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதனையெல்லாம் முறியடித்து மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான சூழல்களை நாங்கள் உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.