வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில், 12½ லட்சம் டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் தகவல்


வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில், 12½ லட்சம் டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 5:00 PM GMT)

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில், 12½ லட்சம் டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆனந்த், செல்வராசு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு 20 அலுவலர்கள் அடங்கிய 10 மண்டல அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் குழுக்களும், 8 அலுவலர்கள் அடங்கிய துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் குழுக்களும், வட்டார வாரியாக 115 அலுவலர்கள் அடங்கிய 10 வெள்ள தடுப்பு குழுக்களும், சரக அளவில் வெள்ள நிவாரண பணிகள் செயல்படுத்த 88 அலுவலர்கள் அடங்கிய 29 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

151 குழுக்கள்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 48 அலுவலர்கள் அடங்கிய 12 மருத்துவ குழுக்களும், அரசு மருத்துவமனைகளில் 32 அலுவலர்கள் அடங்கிய 8 மருத்துவ குழுக்களும், கால்நடை பராமரிப்புத்துறையில் 10 அலுவலர்கள் அடங்கிய 10 கண்காணிப்பு குழுக்களும், கால்நடை மருத்துவமனைகளில் 103 அலுவலர்கள் அடங்கிய 52 கால்நடை மருத்துவ குழுக்களும், 5 அலுவலர்கள் அடங்கிய 1 போக்குவரத்து அலுவலர்கள் குழு என மொத்தம் 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையில் நீச்சல் பயிற்சி பெற்ற 105 காவலர்களும், ஊர்க்காவல்படையை சேர்ந்த 20 ஊர்க்காவலர்களும், 30 தீயணைப்பு வீரர்களும், 3 ஆயிரத்து 180 முதல்நிலை பொறுப்பாளர்களும், 424 கால்நடைகளுக்கான முதல்நிலை பொறுப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் மூலம் 21 இடங்களில் 14 ஆயிரத்து 725 மணல் மூட்டைகளும், 98 ஆயிரம் காலி சாக்குகளும், 563 டன் மணல், 4 ஆயிரத்து 940 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

249 நிவாரண முகாம்கள்

மின்சாரத்துறை மூலம் 12 துணை மின் நிலையங்களில் 3,120 மின்கம்பங்களும், 5 மின்மாற்றிகளும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள 126 ரேஷன் கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய குடிமைப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

12½ லட்சம் டன் அரிசி

வடகிழக்கு பருவமழையையொட்டி உணவுத்துறையை பொருத்தமட்டில் தமிழகத்தில் 12 லட்சத்து 66 ஆயிரம் டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இம்மாவட்டத்தில் 32 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. இதில் 1,309 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் மூலம் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் வெளியிட, அதை செல்வராசு எம்.பி. பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிவக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story