கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு


கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 7:16 PM GMT)

கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

கரூர்,

டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் என்கிற ஒருவகை கொசுவினால் பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக வீடுகள், நிறுவனங்களில் மழைநீர் தேங்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கரூர் நகராட்சி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகள், கொசுஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் வெங்கமேடு அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அடங்கிய குழுவினர் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது அங்கு திடீரென வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததார்.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

பின்னர் அந்த குழுவினருடன் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் வழங்கினார். பின்னர் வீடு வீடாக சென்று சிமெண்டு தொட்டி உள்ளிட்டவற்றில் டெங்கு கொசுப்புழு உருவாக வழிவகை ஏதேனும் இருக்கிறதா? வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றனவா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிமெண்டு தொட்டி, பேரல் உள்ளிட்டவற்றில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டது. குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு பணியாளர்கள் வாகனத்தில் அள்ளி அப்புறப்படுத்தினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், நகர்நல அதிகாரி பிரியா மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நிர்வாகி மலையம்மன் நடராஜன், வார்டு செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story