பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே, அடித்து கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணம் வீச்சு
பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே அடித்து கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். அவரை கொலை செய்து வீசிச்சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே உள்ள முட்புதரில் நேற்று முன்தினம் இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முட்புதரில் கிடந்த பிணத்தை கைப்பற்றினர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாக ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவரை அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் டாஸ்மாக் கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் குடிபோதையில் பலர் பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. ஆனந்தன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story