எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ ஆதாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு பேட்டி


எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ ஆதாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2019 4:15 AM IST (Updated: 3 Nov 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் பா.ஜனதா ஆட்சி அமைந்து உள்ளது என்று எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ பதிவு ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரு,

வடகர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொள்ள கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“வட கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டது. இதற்கு மத்திய அரசு தேவையான நிதி உதவியை வழங்கவில்லை. வெறும் ரூ.1,200 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் சேர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் வரி இன்றி இறக்குமதி செய்யப்படும். இதனால் உள்நாட்டில் பால் விலை குறைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. எக்காரணம் கொண்டும் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சேரக்கூடாது. இந்த முடிவை கைவிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் சேர்ந்தால், நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். தீவிர போராட்டம் நடத்துவோம். இந்த ஒப்பந்தம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.

ஏற்கனவே நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் சேர்ந்தால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவர் பேசியுள்ள விஷயங்கள் மிக முக்கியமானவை. இது 2-வது ஆடியோ. கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா நடத்திய குதிரை பேரம் தொடர்பாக ஒரு ஆடியோ உரையாடல் பதிவு வெளியானது. ஆபரேஷன் தாமரைக்கு தற்போது வெளியாகியுள்ள எடியூரப்பாவின் ஆடியோ உரையாடல் மற்றொரு சாட்சி.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மும்பையில் ஓட்டலில் தங்கவைத்து பார்த்துக் கொண்டார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். அமித்ஷா, உள்துறை மந்திரியாக உள்ளார். அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். நாங்கள் கூறிய குற்றச்சாட்டு தற்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அரசை கவிழ்க்கும் சதி திட்டம் எடியூரப்பாவின் ஆடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் பா.ஜனதா ஆட்சி அமைந்து உள்ளது என எடியூரப்பா குறிப்பிட்டு உள்ளார்.

எடியூரப்பாவின் ஆடியோ உரையாடல் பதிவை, சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் வக்கீல்கள் முக்கிய ஆதாரமாக வழங்க உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சி அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தது தவறானது. ஆடியோவில் எடியூரப்பா எல்லாவற்றையும் தெளிவாக கூறியுள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்துறை மந்திரி அமித்ஷா செயல்பட்டுள்ளார். இதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்கிறோம். கவர்னரிடமும் கடிதம் கொடுக்க உள்ளோம்.” இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் உதவி செய்தனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோவை முக்கிய ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story