மாவட்ட செய்திகள்

எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம் + "||" + Contains the speech of Yeddyurappa Audio issue Karnataka should be dissolved Letter of Congress to the President

எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்

எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தியாகத்தால் ஆட்சி அமைக்க முடிந்தது என்று எடியூரப்பா பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கர்நாடக பா.ஜனதா அரசை உடனே கலைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது.

அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கொறடா உத்தரவை மீறியதாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.


கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கூறி வந்தனர். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பான பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதில் பேசிய எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவு, திடீரென நேற்று முன்தினம் வெளியானது. அதில் பேசியுள்ள முதல்-மந்திரி, “ஆபரேஷன் தாமரை திட்டம் நமது கட்சியின் தேசிய தலைவர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 17 எம்.எல்.ஏ.க்களையும் மும்பையில் அவர் மூலம் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பா.ஜனதா ஆட்சி அமைய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை தியாகம் செய்துள்ளனர்“ என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாவின் இந்த ஆடியோ பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நேற்று ராஜ்பவனுக்கு வந்து கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் வழங்கினர். அத்துடன் எடியூரப்பாவின் பேச்சின் வீடியோ அடங்கிய ‘பென்டிரைவ்‘ கவர்னரிடம் வழங்கினர்.

காங்கிரசார் வழங்கியுள்ள கடிதத்தில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மும்பையில் தங்க வைத்திருந்ததாக எடியூரப்பா கூறியுள்ளார். அவர்களின் தியாகத்தால் தான் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது என்றும் பேசியுள்ளார். அரசியல் சாசனத்தை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அதற்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். ஜனநாயகம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டுள்ள கர்நாடக பா.ஜனதா அரசை உடனே கலைக்க வேண்டும். உள்துறை மந்திரி அமித்ஷாவை நீக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.