மோட்டார் சைக்கிளை வழிமறித்து அ.தி.மு.க. நிர்வாகி அடித்துக்கொலை தப்பிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளை வழிமறித்து அ.தி.மு.க. நிர்வாகி அடித்துக்கொலை தப்பிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 3 Nov 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை வழிமறித்து அ.தி.மு.க. நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள சுள்ளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 40). விவசாயி. இவர் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் எஸ்.புதூரில் இருந்து தனது வீட்டுக்கு இரவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் அவரை பின் தொடர்ந்து வாகனங்களில் வந்தனர்.

கொலை

திடீரென அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து குமாரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர் சுதாரித்து அங்கிருந்து தப்புவதற்குள் அந்த கும்பல் சரமாரியாக அவரை தாக்கியது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குமார் கீழே விழுந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து குமாரின் சகோதரர் வீரமணிக்கு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வீரமணி உடனடியாக குமாரை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் எஸ்.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.

பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து உலகம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். குமாரின் உடலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து குமாரின் மனைவி சரசுவதி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.செந்தில் நாதன், குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மோட்டார் சைக்கிளை வழிமறித்து அ.தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story