புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம் விஷவண்டு கடித்தது


புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம் விஷவண்டு கடித்தது
x
தினத்தந்தி 2 Nov 2019 9:52 PM GMT (Updated: 2 Nov 2019 9:52 PM GMT)

விஷவண்டு கடித்து புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் மரணமடைந்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் புருஷோத்தமன் (வயது 71). முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆவார். இவருக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

இவர் தினமும் காலையில் புதுச்சேரியில் இருந்து சிறுவள்ளிக்குப்பம் சென்று அங்குள்ள தனது நிலத்தில் விவசாய பணிகளை பார்வையிடுவது வழக்கம்.

இதேபோல் நேற்று காலையில் தனது விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை அவர் பார்வையிட்டார். மதியம் 1.15 மணியளவில் அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. அப்போது அங்குள்ள மரத்தின் அருகே புருஷோத்தமன் ஒதுங்கி நின்றார். அந்த மரத்தில் இருந்த விஷவண்டு புருஷோத்தமனை கடித்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த அவரது உதவியாளர் செங்கேணி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புருஷோத்தமனை கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புருஷோத்தமன் 4.8.1948-ம் ஆண்டு பிறந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் எம்.ஜி.ஆர். இறந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்தவர். 1985-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பணியற்றினார்.

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் அரியாங்குப்பம் தொகுதியை பிரித்து உருவாக்கப்பட்ட மணவெளி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார்.

புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 5 மகள்களும் உள்ளனர். அதில் 2 மகள்கள் பிரான்சில் வசிக்கின்றனர். புருஷோத்தமன் உடல் மணவெளியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (ஞாயிற்றுக் கிழமை) வைக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.

Next Story