ஊழல் பேய்களிடமிருந்து புதுச்சேரி பாதுகாப்பை விரும்புகிறது - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்


ஊழல் பேய்களிடமிருந்து புதுச்சேரி பாதுகாப்பை விரும்புகிறது - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:45 AM IST (Updated: 3 Nov 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் பேய்களிடமிருந்து புதுச்சேரி பாதுகாப்பை விரும்புகிறது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக அடங்கிக் கிடந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. இந்திராகாந்தி நினைவு நாளில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அரசின் திட்டங்களை டெல்லியில் இருந்து வந்த பேய் தடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.

முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். முதல்-அமைச்சரின் கருத்து அருவருக்கத்தக்கதாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பசுமையான புதுச்சேரியை உருவாக்க பேய்கள் மரங்களை நாடாது. மேலும் வாய்க்கால் களை தூர்வாருதல் போன்ற பணிகளில் ஈடுபடாது. லஞ்சம், ஊழலை தடுக்க சி.பி.ஐ. கிளை கேட்காது.

புதுச்சேரியில் நில அபகரிப்பாளர்கள் என்ற வடிவத்தில் பல உண்மையான பேய்கள் உள்ளன. வயதான மூத்த குடிமக்களின் சொத்துகளை அவர் கள் அபகரிக்கிறார்கள். இதுபோன்ற பல விஷயங்கள் தீவிர விசாரணையின் கீழ் உள்ளன.

ரவுடிகள் என்று அழைக்கப்படும் இந்த பேய்கள் இப்போது போலீஸ் கண்காணிப்பின் கீழ் உள்ளன. போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா இதுபோன்ற பேய்களின் வரலாற்றை பார்க்க உத்தரவிட்டுள்ளார்.

அவர்களை விசாரித்தால் அவர்களது கூட்டாளிகள், அவர்களால் பயனடைந்தவர் கள் விவரம் தெரியவரும். இத்தகைய உண்மையான பேய்களை கண்டறிய முதல்-அமைச்சருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதற்கு நானும் தயாராக உள்ளேன்.

அப்படியிருக்க என்னை பேய் என்பது தங்களது தவறான அடையாளம் காணும் தன்மையாகும். புதுச்சேரியானது இத்தகைய ஊழல் மற்றும் வன்முறை பேய்களிடம் இருந்து பாதுகாப்பினை விரும்புகிறது.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Next Story