சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்: திருப்பரங்குன்றம்-சோலைமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்: திருப்பரங்குன்றம்-சோலைமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:24 PM GMT (Updated: 2 Nov 2019 11:24 PM GMT)

திருப்பரங்குன்றம், சோலைமலையில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்,

தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு எழுந்தருளும் அறுபடைவீடுகளில் முதல் படைவீடு என்ற பெருமை கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் முருகப் பெருமான் தன் தாயாரான கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி கோவிலில் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சம்ஹார அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்குள் இருந்து மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வந்தார். அதில் காப்பு கட்டி விரதம் இருந்த முருகப்பெருமானின் பிரதிநிதியாக 3-வது ஸ்தானிகர்செல்லப்பா பட்டர் வந்தார். இதே சமயம் வெள்ளை குதிரை வாகனத்தில் போர்ப்படை தளபதியான வீரபாகு தேவர் அமர்ந்து வீதி உலா வந்தார்.

இதற்கிடையில் 5.10 மணிக்கு இருமாப்பு கொண்ட சூரபத்மன் வீதி உலா வந்தார். இதனையடுத்து கோவில் 2-வது ஸ்தானிக பட்டர் ரமேஷ் தனது கையில் வீரவாள் ஏந்தியபடி கோவில் யானை மீது அமர்ந்தபடி வீதி உலா வந்தார்.

இதற்கிடையில் சூரபத்மன் மனித முகமாக, சிங்கமுகமாக, ஆட்டு கிடாவாக மாறி, மாறி உருவெடுத்தார். இதேவேளையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேல் கொண்டு நான்கு திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை ஓட, ஓட துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு 6.21 மணிக்கு முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். அங்கு கூடிஇருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா‘ ‘வீரவேல்முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு முருகப்பெருமான், தெய்வானைக்கு மாலை மாற்றி தீபாராதனை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சட்டத்தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனம் மற்றும் தங்க கவசம் அணிவித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மதுரை அருகே அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்தல விருட்சமான நாவல்மரத்தில் அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்தார். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வருடந்தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி பெருந்திருவிழாவும் ஒன்றாகும்.

இங்கு கடந்த 28-ந் தேதி விக்னேஷ்வரர் பூஜை, யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா நேற்று நடந்தது. இதில் காலையில் யாகசாலை பூஜைகளும் குதிரைவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

தொடர்ந்து மாலையில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வெள்ளிமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி புறப்பாடாகி ஈசானதிக்கிலிருந்து கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது.

தொடர்ந்து ஸ்தல விருட்சமான நாவல்மரத்தடியில் பத்மாசூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் காட்சி நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தீபாராதனையும் விசேஷ பூஜையும் நடந்தது. இதைதொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.

இன்று காலை 10 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 12 மணிக்கு திருபாவாடை தரிசனம், சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story