அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சலுக்கு மணப்பெண் பலி - சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சலுக்கு மணப்பெண் பலி - சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:38 PM GMT (Updated: 2 Nov 2019 11:38 PM GMT)

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மணப்பெண் பலியானார்.

அடுக்கம்பாறை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் மண்டலம் நரசிம்மபுரம் பஞ்சாயத்து டி.என்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்ராஜூ. இவரது மகள் சந்திரகலா என்கிற காவ்யா (வயது 18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் கடந்த 30-ந் தேதி நடக்க இருந்தது. இதையொட்டி இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு காவ்யாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமாகவில்லை.

இதையடுத்து வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து காய்ச்சல் தீவிரமாகவே வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

எனினும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு டாக்டர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Next Story