விழுப்புரம் அருகே, மின்னல் தாக்கி பெண் பலி - 2 பேர் படுகாயம்
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணா. இவரது மனைவி சிவப்பிரியா(வயது 23). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை சிவப்பிரியா, பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சாலட்சுமி(60) என்பவருடன் அருகில் உள்ள மலட்டாறு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மலட்டாற்றில் நடந்து சென்ற சிவப்பிரியா, அஞ்சாலட்சுமி ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து, மயங்கி விழுந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவப்பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அஞ்சாலட்சுமிக்கு டாக்டர் கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதே போல் தோகைப்பாடியில் எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருகோடிநெற்குணம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி செல்வநாயகி(42) என்பவரையும், அவரது 2 மாடுகளையும் மின்னல் தாக்கியது. இதில் செல்வநாயகி பலத்த காயமடைந்து, மயங்கி விழுந்தார். 2 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
Related Tags :
Next Story