போக்குவரத்து சிக்னல்களில், வாகனங்களை ஒழுங்குபடுத்த பிளாஸ்டிக் தடுப்பான்கள்


போக்குவரத்து சிக்னல்களில், வாகனங்களை ஒழுங்குபடுத்த பிளாஸ்டிக் தடுப்பான்கள்
x
தினத்தந்தி 3 Nov 2019 9:30 PM GMT (Updated: 3 Nov 2019 5:38 PM GMT)

கோவையில் சிக்னல்களில் திரும்பும் வாகனங்களை ஒழுங்குபடுத்த பிளாஸ்டிக் தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை,

கோவையில் உள்ள சிக்னலில் இருந்து வலது புறம் திரும்பும் வாகனங்களுக்கு ஒரு பாதையும், நேராக செல்லும் வாகனங்களுக்கு ஒரு பாதையும், இடது புறம் திரும்பும் வாகனங்களுக்கு இடது புறத்தில் ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. அதை குறிக்கும் வகையில் சிக்னல் அருகே சாலையில் 3 கோடுகள் (லேன்) வரையப்பட்டு உள்ளன. எனவே எங்கு செல்ல வேண்டுமோ அதற்குரிய பாதைக்குள் (கோட்டுக்குள்) நிறுத்தி வாகனங்களை முன்னோக்கி செலுத்த வேண்டும்.

ஆனால் கோவையில் உள்ள பெரும்பாலான சிக்னல்களில் வலதுபுறம் செல்ல வேண்டிய வாகனங்கள் இடதுபுறமும், இடதுபுறம் செல்ல வேண்டிய வாகனங்கள் வலதுபுறமும் நிற்கின்றன. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் அந்த வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக முண்டியடித்து செல்ல முயல்கின்றன. இதனால் சிக்னல் பகுதிகளில் கூட வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த சிக்னல்களில் நிற்கும் போலீசார் ஒவ்வொரு முறையும் வாகனங்களை சீராக செல்ல வைப்பது என்பது முடியாத காரியமாகும்.

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள முக்கிய சிக்னல்களில் வலது புறம் திரும்பும் வாகனங்களின் வசதிக்காக உயிர் என்ற அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் தடுப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

சாலையில் பிளாஸ்டிக் தடுப்பான்கள் அமைக்கப்பட்ட பின்னர் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் எளிதாக செல்ல முடிகிறது. இதற்கு முன்பு போக்குவரத்து போலீசார் நின்று வாகன ஓட்டிகளை அந்தந்த பாதையில் நிற்குமாறு அறிவுறுத்தினாலும் நேராக செல்பவர்கள் வலது புறம் திரும்பும் பாதையில் வந்து நின்று கொள்வார்கள். ஆனால் தற்போது அதற்கென்று பாதை அமைத்து அதில் பிளாஸ்டிக் தடுப்பான்கள் அமைத்த பின்னர் நேராக செல்லும் வாகனங்கள் அந்த பாதையில் நிற்பதில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் எளிதாக உள்ளது. இதே போன்று இடதுபுறம் திரும்பும் வாகனங்கள் செல்வதற்காக பிளாஸ்டிக் தடுப்பான்கள் அமைத்தால் சிக்னல்களில் வாகனங்கள் சீராக செல்ல வசதியாக இருக்கும்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

Next Story