கூடலூரில், நாட்டு ரக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
கூடலூரில் நாட்டு ரக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உருளைக்கிழங்கு, கேரட், காலிப்பிளவர், முட்டைகோஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விளைகிறது. மேலும் சைனிஷ் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. இதேபோன்று கூடலூர் பகுதியில் பணப்பயிர்கள் விளைகிறது. மேலும் நேந்திரன் வாழை மற்றும் சமவெளி பிரதேசங்களில் விளையும் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் வகையில் கூடலூரில் நெல் விவசாயமும் நடைபெற்று வருகிறது.
இங்கு மவுண்டாடன் செட்டி சமுதாயத்தை சேர்ந்த விவசாயிகள் பாரம்பரியமாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர்வயல், குனில், கம்மாத்தி, பாடந்தொரை, தேவர்சோலை மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் நிலத்தை உழுது நாற்றங்காலில் விதை நெல்லை தூவி விடுகின்றனர்.
பின்னர் கனமழை பெய்யும் சமயத்தில் வளர்ந்த நெல் நாற்றுக்களை பிடுங்கி வயலில் நடவு செய்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் வேளாண் துறையில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் பெற்றிருந்தாலும், கூடலூர் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கந்தகசால், அடுக்கை, பாரதி, வாலி உள்ளிட்ட நாட்டு நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். இவ்வகை நெற்பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. நிலத்தில் ஈரத்தன்மை இருந்தால் போதும். மேலும் பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் தேவை இல்லை.
இங்கு இயற்கை முறையில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. உயர் நெல் ரகங்களை காட்டிலும் நாட்டு நெல் ரகங்கள் சுவை மிக்கதாக உள்ளன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயலில் நாட்டு நெல் ரகங்களை பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அதன் மூலம் கிடைக்கும் அரிசியை சொந்த பயன்பாட்டுக்கு வைத்து கொள்கின்றனர். அவர்கள் உணவுக்காக மார்க்கெட்டுகளில் அரிசி வாங்கி சமைப்பது இல்லை. இதனால் உடல் நலனுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதாக தெரிவிக்கின் றனர்.
இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் பெரும்பாலும் நாட்டு நெல் ரகங்களே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் நெல் வெளிமார்க்கெட்டில் விற்கப்படுவது இல்லை. நாட்டு நெல் ரகங்களில் இருந்து கிடைக்கும் அரிசியை சமைக்கும்போது சுவை மிக்கதாகவும், தனி மணம் உடையதாகவும் இருக்கும். நாட்டு நெல் ரகங்களில் சில ரகங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்ற ரகங்கள் அழிந்து விட்டன. மேலும் நாட்டு நெல் ரகங்களை பயிரிடுவதால் பூச்சி தாக்குதல் மிக குறைவாக உள்ளது. ஆனால் உயர் நெல் ரகங்களை பயிரிட்டால் பூச்சி மருந்து கண்டிப்பாக தெளிக்க வேண்டும்.
இதுதவிர ரசாயன உரங்களும் இட வேண்டும். நாட்டு நெல் ரகங்களுக்கு வயல் ஈரத்தன்மையுடன் இருந்தால் போதும். தற்போது வடகிழக்கு பருவமழையும் கை கொடுப்பதால் நெற்பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கிறது. அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். அழிந்து போன நாட்டு நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும். இதனால் விளைச்சலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனவே அழியும் தருவாயில் உள்ள நாட்டு நெல் ரக விதைகளை தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை விவசாயம் பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story