ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2019 3:45 AM IST (Updated: 3 Nov 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

சத்திரக்குடி அருகே உள்ளது துரத்தியேந்தல். இந்த ஊரைச்சேர்ந்தவர் அமானுல்லா என்பவரின் மகன் அமீர்உசேன் என்ற ராஜ் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் மீது ராமநாதபுரம், தேவிபட்டினம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி ராமநாதபுரம் ரோமன் சர்ச் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஆட்டோநிலையம் அருகில் அமீர்உசேன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரின் மனைவி நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் பிரசாத் (27) என்பவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் கடந்த 1-ந்தேதி சரணடைந்தார். இந்தநிலையில் ராமநாதபுரம் திடீர்நகர் கோட்டை என்பவரின் மகன் முகேஷ் (20) என்பவரை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தும் போது தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story