சசிகலா பெயரை சொல்லி அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
சசிகலா பெயரை சொல்லி சிலர் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்பது முதல்-அமைச்சர் முடிவாகும். அவர் நினைத்தால் மாற்றலாம். ஜெயலலிதா அடிக்கடி மாற்றம் செய்தாரே என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் மக்கள் ஆளுமை மிக்கவர்கள். எது நல்லது, கெட்டது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். இருப்பினும் அவர்கள் தவறுகள் குறித்த புகார்கள் மீது விளக்கம் கேட்டு அதன் பிறகு தான் நடவடிக்கை எடுத்தார்கள்.
தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பீர்களா என்ற கேள்வி தற்போது எழவில்லை. ஏனென்றால் அவர் தற்போது கர்நாடக சிறையில் இருக்கிறார். அவர் அங்கிருந்து வந்தபிறகு தான் இது பற்றி பேச வேண்டும். இப்போது அது தேவையில்லாத ஒன்று. ஆனால் இது போன்ற கேள்விகளை எழுப்பி சிலர் வேண்டுமென்றே அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அது பலிக்காது. அ.தி.மு.க. பண பலத்தால் தான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அண்ணா தொடங்கிய தி.மு.க. இன்று, கருணாநிதியின் குடும்ப கட்சியாக மாறி விட்டது.
மதுரை செல்லூர் கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பெண் துணை மேலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினிகாந்த் நல்ல மனம்படைத்தவர். அவருக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பதற்கு ஒரு ரசிகனாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story