10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான, தேசிய திறனாய்வு தேர்வை 4,796 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 4,796 பேர் எழுதினர்.
வேலூர்,
தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வுகள் துறை மூலம் தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் தேர்வினை எழுத 10-ம் வகுப்பு படிக்கும் 5 ஆயிரத்து 139 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத மாணவ- மாணவிகள் காலை முதலே மையங் களுக்கு சென்றனர்.
காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ‘அறிவுசார் மற்றும் விரிவான மொழித்தேர்வு’ என்ற தலைப்பிலும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ‘படிப்பறிவு திறன் பகுதித்தேர்வு’ என்ற தலைப்பிலும் இருபிரிவுகளாக நடைபெற்றது.
வேலூரில் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 20 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வினை 4 ஆயிரத்து 796 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 343 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் மாணவ- மாணவிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வினை 5 கல்வி மாவட்ட அலுவலர்கள் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story