சேத்தியாத்தோப்பு அருகே, ஆழ்துளை கிணற்றை மூடிய போலீஸ்காரர்கள் - கிராம மக்கள் பாராட்டு


சேத்தியாத்தோப்பு அருகே, ஆழ்துளை கிணற்றை மூடிய போலீஸ்காரர்கள் - கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 4 Nov 2019 4:00 AM IST (Updated: 4 Nov 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே ஆழ்துளை கிணற்றை போலீஸ்காரர்கள் மூடினர். அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு,

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானான். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற துயரசம்பவம் இனியும் நடக்காமல் தடுக்கும் விதமாக, பயன்பாடற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூடுமாறு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் இதுபோன்ற கிணறுகள் மூடுப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வலசக்காடு கிராமத்திற்கு சென்ற போது, அங்கு சாலையோரம் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று திறந்த நிலையில் கிடந்தது.

இதை பார்த்த போலீசார், அந்த பகுதி மக்களிடம் விசாரித்தனர். அதில் பாளையங்கோட்டையை சேர்ந்த கணக்கப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான நிலம் என்பதும், நீண்டகாலமாக ஆழ்துளை கிணறு பயன்பாடற்று திறந்த நிலையில் கிடப்பதும் தெரியவந்தது. உடன் கணக்கப்பிள்ளையை அழைத்து போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்தனர். பின்னர், ஜல்லி, மண் ஆகியவற்றை கொண்டு ஆழ்துளை கிணற்றை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் மூடினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story