வரத்து குறைவு எதிரொலி: பெரிய வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு - கோவையில் கிலோ ரூ.75-க்கு விற்பனை
வரத்து குறைவு எதிரொலியாக கோவையில் பெரிய வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை,
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் விலை உயர தொடங்கியது. கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. அதுவே காய்கறி கடைகளில் வெங்காயம் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.
இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ‘அப்படி என்னதான் ஆச்சு...?’ என்று எண்ணும் அளவுக்கு வெங்காயத்தின் விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக வரத்து குறைந்ததின் எதிரொலியே வெங்காயம் விலையின் அதிரடி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கோவை உழவர்சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக மராட்டியம் (சோலாபூர், புனே), கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே சரிவர விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே வந்துகொண்டிருந்தன.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி, வெங்காயம் பயிரிடப்பட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்ததால், விளைச்சல் பாதித்து உள்ளது. இதனால் அவற்றின் வரத்தும் குறைந்து, தற்போது உழவர் சந்தைக்கு குறைந்த அளவிலேயே பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. இதனால் கடந்த வாரத்தில் ரூ.50-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ பெரிய வெங்காயம் தற்போது ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. இது இன்னும் விலை உயரலாம்.
மேலும் சிறிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை ஆகிறது. அதேபோல சாம்பார் வெங்காயம் விலையும் லேசாக உயர்ந்திருக்கிறது.
சாம்பார் வெங்காயத்தை பொறுத்தவரையில் அதுவும் விவசாயிகள் கையிருப்பில் உள்ள சரக்குகளே தற்போது விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம் ரூ.48-க்கு விற்ற சாம்பார் வெங்காயம் தற்போது கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வரத்து அதிகரிப்பு காரணமாக உருளைக் கிழங்கு விலை குறைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு (பழைய விலை அடைப்புக்குறிக்குள்):-
கேரட்- ரூ.50 (மாற்றம் இல்லை), பீன்ஸ்- ரூ.50 (மாற்றம் இல்லை), நூக்கல்- ரூ.30 (மாற்றம் இல்லை), முட்டைக்கோஸ்- ரூ.20 (மாற்றம் இல்லை), பச்சை மிளகாய்- ரூ.28 (மாற்றம் இல்லை), குடை மிளகாய்- ரூ.50 முதல் ரூ.55 வரை (மாற்றம் இல்லை), இஞ்சி (புதியது)- ரூ.100 (மாற்றம் இல்லை), சேனைக்கிழங்கு- ரூ.28 (மாற்றம் இல்லை), சேப்பங்கிழங்கு- ரூ.35 (மாற்றம் இல்லை), வெண்டைக்காய்- ரூ.35 (மாற்றம் இல்லை), அவரைக்காய்- ரூ.38 (ரூ.30), கொத்தவரங்காய்- ரூ.25 (ரூ.24), பாகற்காய் - ரூ.30 (ரூ.26), முருங்கைக்காய்- ரூ.95 முதல் ரூ.100 வரை (ரூ.48), முள்ளங்கி (வெள்ளை)- ரூ.24 (மாற்றம் இல்லை), புடலங்காய்- ரூ.24 (ரூ.20), ஆப்பிள் தக்காளி- ரூ.32 (மாற்றம் இல்லை).
Related Tags :
Next Story