மாவட்ட செய்திகள்

வடகர்நாடகத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேர்வான கல்லூரி மாணவி + "||" + To the Indian Army selected college student

வடகர்நாடகத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேர்வான கல்லூரி மாணவி

வடகர்நாடகத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேர்வான கல்லூரி மாணவி
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அதேபோல ராணுவத்திலும் சேர்ந்து பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை உலககிற்கு நிரூபித்து வருகிறார்கள்.
பெங்களூரு,

வடகர்நாடகத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு கல்லூரி மாணவி ஒருவர் தேர்வாகி உள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

தார்வார் மாவட்டம் மடிக்கோப்பா கிராமத்தை சேர்ந்தவர் பீமக்க சவ்கானா(வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என கனவு இருந்து வந்தது.


இந்த நிலையில் வடகர்நாடகத்தைச் சேர்ந்த 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆள்சேர்ப்புக்கான உடல் தகுதித்தேர்வு முடிந்து பின்னர் எழுத்துத் தேர்வுக்கு 8.50 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எழுத்துத்தேர்வும் தார்வாரில் நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதில் பீமக்க சவ்கானா வெற்றிபெற்றார். பெண்களில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாணவி பீமக்க சவ்கானா கூறுகையில், “இந்திய ராணுவத்திற்கு தேர்வாகி இருப்பது தூக்கத்தில் வரும் கனவு போன்று உள்ளது. ராணுவத்தில் சேர வேண்டும் என்று எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசை இருந்தது. அதை நான் எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் சற்றும் யோசிக்காமல் அதற்கு சம்மதம் தெரிவித்து மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுவேன்“ என்று கூறினார்.

இந்தநிலையில் பீமக்க சவ்கானா இந்திய ராணுவத்தில் தேர்வான செய்தியை கேட்டவுடன் அவருடைய தாய் ஆனந்த கண்ணீருடன் மகளை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.