மாவட்ட செய்திகள்

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ஆடியோ வெளியான விவகாரம்: எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது பதவி விலககோரி - காங்கிரஸ் இன்று போராட்டம் + "||" + The crisis is over for Yeddyurappa Resignations The Congress is fighting today

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ஆடியோ வெளியான விவகாரம்: எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது பதவி விலககோரி - காங்கிரஸ் இன்று போராட்டம்

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ஆடியோ வெளியான விவகாரம்: எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது பதவி விலககோரி - காங்கிரஸ் இன்று போராட்டம்
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அவர் பதவி விலக கோரி மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் முன்பு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது அந்த கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த புதிய அரசு, நேற்று முன்தினத்துடன் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.


இதற்கிடையே, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமிக்க கோரியும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் போட்டியிட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில் வெளியானது.

அதில் இடம் பெற்றுள்ள எடியூரப்பாவின் பேச்சில், “தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தேசிய தலைவர் (அமித்ஷா) உத்தரவுப்படி மும்பையில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாத்ததும் அவரே. அவர்களின் தியாகத்தால் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. அதனால் இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் டிக்கெட் வழங்கப்படும்” என்று கூறி உள்ளார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேச்சு வெளியானதை தொடர்ந்து, கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நீக்க வேண்டும் என்றும் கோரி ஜனாதிபதிக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் எடியூரப்பாவின் ஆடியோ பேச்சு ஆதாரங்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், எடியூரப்பா பதவி விலக கோரி மாவட்ட தலைநகரங்களில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது.

இதற்கிடையே, எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்துவது முட்டாள் தனமானது என்றார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் தான் பேசியது திரித்து கூறப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது எப்படி?, அந்த ஆடியோவை வெளியிட்டது யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணைக்கு பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தவிர தற்போது 207 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவுடன் 106 பேர் இருக்கிறார்கள். இதனால் இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு குறைவாக வெற்றி கிடைத்தால், எடியூரப்பா ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...