திண்டுக்கல் அருகே, ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது


திண்டுக்கல் அருகே, ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 4 Nov 2019 3:00 AM IST (Updated: 4 Nov 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நத்தம்,

நத்தம் அருகே உலுப்பக்குடியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் உலுப்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பாதுகாப்பானது என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா ஆலோசனையின் பேரில் கவிதா 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த ஆம்புலன்சை டேவிட் என்பவர் ஓட்டினார். சிறுமலை பிரிவு அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியில் சென்றபோது கவிதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் அவர் அலறி துடித்தார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் உமா திவ்யா ஆம்புலன்சிலேயே கவிதாவுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும், சேயும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story