பெண்ணிடம் நகை பறித்த வழக்கில், 2 வாலிபர்கள் கைது; 19 பவுன் நகை பறிமுதல்
பழனியில், பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி,
பழனி ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மனைவி ராமாத்தாள் (வயது 48). இவர் கடந்த மாதம் 23-ந்தேதி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ராமாத்தாளிடம், ஜவகர்நகர் பகுதிக்கு செல்ல வழி கேட்டார். அப்போது திடீரென அந்த நபர் ராமாத்தாளின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சந்தன கலர் பேண்ட், நீலநிற சட்டை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் செல்வது பதிவாகியிருந்தது. இதை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராமாத்தாளிடம் நகை பறித்தது பழனியை அடுத்துள்ள மானூரை சேர்ந்த சிவா (28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைபறிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாபு (25) என்பவருக்கு தொடர்பு இருப்பதும், இவர்கள் இருவரும் பழனி பகுதியில் பல்வேறு இடங்களில் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாபுவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 19 பவுன் நகை மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story