அதியமான்கோட்டை பகுதியில் போலீஸ் நிலையம், கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


அதியமான்கோட்டை பகுதியில் போலீஸ் நிலையம், கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:15 PM GMT (Updated: 3 Nov 2019 9:57 PM GMT)

அதியமான்கோட்டையில் உள்ள போலீஸ் நிலையம், கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் மூலம் சோதனை நடைபெற்றது.

நல்லம்பள்ளி,

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு நேற்று ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவில், சென்னகேசவ பெருமாள் கோவில், அதியமான்கோட்டம் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதனால் ஐ.ஜி. அலுவலக அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

சோதனை

இதையடுத்து போலீசார் தட்சிணகாசி காலபைரவர் கோவில், சென்னகேசவ பெருமாள் கோவில், அதியமான்கோட்டம் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று மாலை 6 மணி அளவில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி எண் குறித்தும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story