புகாரை தொடர்ந்து பொதுகழிப்பிடங்களில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு


புகாரை தொடர்ந்து பொதுகழிப்பிடங்களில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:19 PM GMT (Updated: 3 Nov 2019 10:19 PM GMT)

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து பொதுகழிப்பிடங்களில் கவர்னர் கிரண்பெடி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிப்பிடங்களை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வரும் புகார்களின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில் தூய்மை, சுற்றுப்புறச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரி நகர பகுதிகளில் நகராட்சி சார்பில் இயங்கும் கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அங்கு தூய்மை இல்லாமல் இருப்பதாகவும் புகார் வந்தது. இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் நேராக செஞ்சி சாலையில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு கழிப்பறையாக சென்று பார்வையிட்டார். அப்போது சில சுத்தம் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. உடனே குத்தகைதாரரை அழைத்து கழிப்பிடத்தை சுத்தமாகவும், தூய்மையாக வும் பராமரிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் பழைய சாராய ஆலை அருகே உள்ள கழிப்பிடத்தை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் குத்தகைதாரர்களை அழைத்து நகராட்சி குறிப்பிட்டுள்ள கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கக்கூடாது. கழிப்பறைகளை தூய்மையாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது அவர்கள் இங்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவது இல்லை என்று தெரிவித்தனர்.

அதற்கு கவர்னர் கிரண்பெடி அவர்களிடம், நீங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தால் இதனை பயன்படுத்த அதிக அளவில் வருவார்கள் என்று கூறினார்.

Next Story