போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு: ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - 2 பேரை பிடித்து தீவிர விசாரணை


போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு: ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - 2 பேரை பிடித்து தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 11:52 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 2 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த நபர், ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள போலீசார் உடனடியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசாரும், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் மற்றும் போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.

ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்களை அப்புறப்படுத்த போலீசார் உத்தரவிட்டனர். மேலும், ரெயில் நிலைய வளாகத்தில் உட்கார்ந்து இருந்தவர்களை நடைமேடைகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார் நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.

வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், மோப்ப நாய் கயல் வரவழைக்கப்பட்டது. ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த பொருட்கள், குப்பைத்தொட்டிகள், பார்சல்கள், பயணிகளின் உடைமைகள் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை நடத்தப்பட்டது.

அங்குள்ள கடைகளிலும் தீவிரமாக சோதனை நடந்தது. ஈரோட்டுக்கு வந்த ரெயில்களிலும் போலீசார் ஏறி சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதாவது உள்ளதா? சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாராவது உள்ளனரா? என்றும் சோதனையிட்டனர். போலீசாரின் சோதனையில் மர்மபொருள் எதுவும் சிக்கவில்லை. இருந்தாலும், போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினார்கள். ரெயில் நிலையத்துக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் உண்மையா? அல்லது புரளியா? அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் அழைப்பு ஈரோட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அழைப்பு வந்த செல்போன் எண்ணின் உரிமையாளரான ஈரோட்டை சேர்ந்த ஒருவரையும், அவரது உறவினர் ஒருவரையும் ஈரோடு டவுன் போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story