நிலக்கோட்டை பஸ் நிலையத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் அகற்றம் - வக்கீல்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. வக்கீல்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆக்கிரமிப்பு செய்து ஏராளமானோர் கடைகளை வைத்திருந்தனர். இதனால் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள், 2 நாட்களில் தாங்களாகவே அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி உத்தரவின்பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பஸ் நிலையத்துக்குள் இருந்த வக்கீல் செந்தில் கனியன் என்பவரின் அலுவலகத்தை இடிக்க முயன்றனர். அப்போது அவர் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் 5 பேருடன் சேர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அலுவலகம் உள்பட 40 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story