தனியாருக்கு சொந்தமான 53 ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை - கலெக்டர் தகவல்


தனியாருக்கு சொந்தமான 53 ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:45 AM IST (Updated: 4 Nov 2019 9:06 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தனியாருக்கு சொந்தமான 53 ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு 101 அபாயகரமான இடங்கள் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு கூடுதலாக 132 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த மழையின்போது அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மேலும் 50 இடங்கள் தெரியவந்தது. அதன்படி நீலகிரி முழுவதும் மொத்தம் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. மிகவும் ஆபத்தான இடங்களில் கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீடுகள் கட்ட விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் மீது வனத்துறை, மண்வள பாதுகாப்பு, கனிமம் மற்றும் சுரங்கத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்பு இருந்தால் அனுமதி மறுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதிப்பு இல்லையென்றால் அரசுக்கு பரிந்துரை செய்யலாம். நீலகிரி முழுவதும் ஆயிரத்து 670 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 77 கிணறுகள் மூடப்படவில்லை என்று கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது. 24 ஆழ்துளை கிணறுகள் உள்ளாட்சிக்கு உட்பட்டதால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மீதம் உள்ள 53 ஆழ்துளை கிணறுகள் தனியாருக்கு சொந்தமானவை. அவை பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. அவைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படுவது இல்லை.

அரசாணையில் நெடுஞ்சாலைகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என்று இருப்பதால், சென்னை ஐகோர்ட்டு மூலம் அமைக்கப்பட்ட நீதிமன்ற கமி‌‌ஷன் ஊட்டியில் முழு விவரங்களை கேட்டறிந்து சென்று உள்ளது. இந்த கமி‌‌ஷன் அறிக்கை தாக்கல் செய்யும். வடகிழக்கு பருவமழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கோத்தகிரி அருகே பெட்டட்டி கிராமத்தில் மழை காரணமாக பாறை விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழையால் நெடுஞ்சாலைகள் பாதிப்புக்கு உள்ளானதற்கு ரூ.80 கோடியும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ.65 லட்சமும், நகராட்சிக்கு ரூ.1.9 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சோதனைச்சாவடிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story