ஆத்தூர் காமராஜர் அணை அருகேயுள்ள, ராஜவாய்க்காலில் ‘ஷட்டர்’ அமைத்து தண்ணீரை பிரித்து தரவேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் மனு


ஆத்தூர் காமராஜர் அணை அருகேயுள்ள, ராஜவாய்க்காலில் ‘ஷட்டர்’ அமைத்து தண்ணீரை பிரித்து தரவேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 5 Nov 2019 3:45 AM IST (Updated: 4 Nov 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் காமராஜர் அணை அருகேயுள்ள ராஜவாய்க்காலில் ஷட்டர் அமைத்து தண்ணீரை பிரித்து தரவேண்டும் என்று கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டி, பொன்மாந்துறை, அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடகனாறு விழிப் புணர்வு குழுவினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஆத்தூர் காமராஜர் அணை அருகேயுள்ள ராஜவாய்க்காலில் ஷட்டர் அமைத்து தண்ணீரை பிரித்து குடகனாற்றில் விட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தொடங்கும் குடகனாறு பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அணை நிரம்பி வெளியேறும் தண்ணீர் குடகனாற்றில் வரும். இதற்காக ராஜவாய்க்காலில் தடுப்புக்காக வைத்திருந்த மணல் மூட்டைகளை சிலர் அகற்றி விட்டனர். இதனால் அணைக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ராஜவாய்க்காலில் ஷட்டர் அமைத்து அணைக்கு தண்ணீரை திருப்பி விட வேண்டும். அதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றி அழிந்து வரும் குடகனாற்றை மீட்க வேண்டும். ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள சிந்தலக்குண்டு தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர், நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஆத்தூர் காமராஜர் அணை அருகேயுள்ள ராஜவாய்க்காலில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டுப்பட்டுள்ளது. இதனால் குடகனாற்றில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. தாமரைக்குளம், அவில்தார்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் 8 ஆண்டு களாக வறண்டு கிடக்கின்றன. எனவே, ராஜவாய்க்காலில் ‘ஷட்டர்’ அமைத்து தண்ணீரை பிரித்து தரவேண்டும், இல்லை என்றால் கான்கிரீட் தடுப்புச்சுவரை இடித்து விட்டு, கற்களை வைக்க வேண்டும். மேலும் ராஜவாய்க்காலில் இருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதியாக சொக்குபிள்ளைஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story