உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம்: அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
வேலூரில் அ.தி.மு.க.சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது திடீரென ஒரு பெண் எழுந்து அமைச்சரை பார்க்க உதவியாளர்கள் விடுவதில்லை என ஆவேசமாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர்,
உள்ளாட்சி தேர்தல் குறித்த வேலூர் மாநகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை வேலூரில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
அப்போது அவர் அவர் பேசியதாவது:-
விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தல் அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எந்தவித சச்சரவுகளுமின்றி நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர் பொருளாதாரத்தில் உயர்ந்தவராகவும், அந்தப்பகுதியில் நன்கு அறிமுகமானவராகவும் இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் குறைந்த வாக்குகளில்தான் தோற்றோம். சிறுபான்மையினரின் வாக்குகளைபெற முடியாமல் போனதற்கு பா.ஜ.க. மீதிருந்த அதிருப்தியே காரணம்.
இதனால் நமது வேட்பாளர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும். வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் அந்தந்தப்பகுதிகளில் நடக்கும் நல்ல காரியங்களிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்து அமைச்சரை பார்ப்பதற்கு, அவருடைய உதவியாளர்கள் விடுவதில்லை. பிறகு எப்படி நீங்கள் வட்ட, பகுதி செயலாளர்களை பார்க்கப்போகிறீர்கள் என்று ஆவேசமாக பேசினார். அவரை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அமர வைத்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், ஆவின் தலைவர் வேலழகன், தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story