டி.என்.பாளையம் அருகே, அம்மன் சிலைகளை வயலில் வீசிய லாரி டிரைவர் கைது


டி.என்.பாளையம் அருகே, அம்மன் சிலைகளை வயலில் வீசிய லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 5:09 PM GMT)

டி.என்.பாளையம் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலைகளை பெயர்த்து எடுத்து வயலில் வீசிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

டி.என்.பாளையம்,

டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை மெயின் ரோட்டில் பழமையான பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுத்தம் செய்வதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் வந்துபார்த்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த வேல் கம்புகள் வளைந்திருந்தது. கோவில் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாகிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள வராஹீ, மகேஷ்வரி, வைஷ்ணவி சிலைகளை காணவில்லை. 3 சிலைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவற்றை தேடியபோது 3 சிலைகளும் கோவிலுக்கு பின்புறமுள்ள வயலில் கிடந்தது.

இந்த நிலையில் கோவில் உட்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக காலை 8 மணி அளவில் ஒருவர் வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டனர். அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

உடனே பொதுமக்கள் அவரை பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான சம்பத் குமார் (வயது 39) என்பதும், குடிபோதையில் அவர் கோவிலில் புகுந்து 3 அம்மன் சிலைகளை பெயர்த்து எடுத்து வயலில் வீசியதும் தெரிய வந்தது.

அதன்பின்னர் அங்கிருந்து சென்ற அவர் நேற்று காலை தான் அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தனர்.
அம்மன் சிலைகளை வயலில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story