ஜெயில் சாப்பாட்டுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானேன் - மில்தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


ஜெயில் சாப்பாட்டுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானேன் - மில்தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:30 AM IST (Updated: 5 Nov 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஜெயிலில் சாப்பாடு கிடைக்கும் என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானேன் என்று மில்தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு, 

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் கூறினார். மேலும் தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து தளபதி அனுப்பி வைத்திருப்பதாகவும், முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் எனவும், தன்னுடைய பெயர் இப்ராஹிம் எனவும் தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் ஈரோடு ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர். ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில்வே நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றாலும், ஈரோடு ரெயில் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பை ஆய்வு செய்தனர். அப்போது அந்த எண், ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த லிங்கராஜ் (வயது 45) என்பவருடையது என்று தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, கடந்த 1-ந்தேதி மதுபோதையில் லிங்கராஜ் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் இருக்கும் இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து, தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மில்தொழிலாளி சந்தோஷ் (41) என்பதும், அவர் தான் லிங்கராஜ் தவறவிட்ட செல்போனில் இருந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக சந்தோசை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சந்தோஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இப்போது என்னுடன் யாரும் இல்லை. இதனால் நான் சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தேன். அங்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால் வேலையை விட்டுவிட்டேன். வாழ்க்கையில் வெறுப்படைந்த நான், சாப்பிட வழியில்லாததால் ஏதாவது செய்து ஜெயிலுக்கு சென்றால் தவறாமல் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் 100 எண்ணை தொடர்பு கொண்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். 

Next Story