ஈரோடு சூரம்பட்டியில் செயல்படும் மாநகராட்சி உரக்கிடங்கை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


ஈரோடு சூரம்பட்டியில் செயல்படும் மாநகராட்சி உரக்கிடங்கை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 6:36 PM GMT)

ஈரோடு சூரம்பட்டியில் செயல்படும் மாநகராட்சி உரக்கிடங்கை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தற்போது, மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து உரமாக்கும் கிடங்கு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் கடும் துர்நாற்றத்தால், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க சிரமமாக உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் செயல்படும் உரக்கிடங்கை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு நீர்மின் உற்பத்தி வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஈரோடு கோட்டத்தில் உள்ள 13 நீர்மின் நிலையங்களில் 120-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறோம். எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஊதிய உயர்வு, மாதம்தோறும் 7-ந்தேதிக்குள் ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள வடுகபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க தனி நபர் தடை விதிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து கிணற்றில் தண்ணீர் எடுக்க ஆவன செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘விவசாய விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடியதாக ஈரோட்டை சேர்ந்த இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 285 மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story