நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது; சித்தராமையா மீது எடியூரப்பா பாய்ச்சல்
துணிச்சல் இருந்தால் நீங்கள் இடைத்தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று கூறி சித்தராமையா மீது எடியூரப்பா ஆவேசத்தை வெளிப் படுத்தினார். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு,
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய சித்தராமையாவே காரணம். அதனால் தான் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஆனால் அவர் இன்று பா.ஜனதா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நீங்கள் இவ்வாறு பேசுவது சரியா?. துணிச்சல் இருந்தால் நீங்கள் இடைத்தேர்தலை எதிர்கொள்ளுங்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா ஆகிய கட்சிகள் சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிடுவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. அதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் சித்தராமையா, சுப்ரீம் கோர்ட்டில் குழப்பத்தை விளைவிக்கிறார். மக்களின் கவனத்தையும் திசை திருப்புகிறார். நான் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பதிவு, பொய்யானது. அதில் உண்மை இல்லை. கூட்டணி அரசில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
அதனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினேன். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்ய உள்ளது. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால் அந்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி உத்தரவிட கோரினர்.
ராஜினாமா கடிதம் முறையாக இல்லை என்று சபாநாயகர் கூறியதால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஒரு முறை ராஜினாமா கடிதம் கொடுத்தனர். ஆனால் சித்தராமையாவுடன் சபாநாயகர் கூட்டு சேர்ந்து, 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். இது சதி இல்லையா?. அத்தகைய சித்தராமையா பா.ஜனதாவை குறை சொல்கிறார்.
எனது ஆடியோ வெளியானதால், இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் காங்கிரசுக்கு தான் பாதிப்பு உண்டாகும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரே இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் சித்தராமையா எப்படி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்?.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா தனது கட்சியில் சேர்த்து கொள்ளட்டும். நாங்கள் அவரை தடுக்கவில்லை. இடைத்தேர்தலை சந்திக்க அவருக்கு தைரியம் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக தான் இருக்கும். சட்டசபையில் சித்தராமையா காங்கிரசை வழிநடத்துவார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story