கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு


கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 7:15 PM GMT)

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வந்த நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பட்டா வழங்கக்கூடாது

திருச்சி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களின் நிலங்கள் ஆலய பராமரிப்பு, பூஜை போன்ற பணிகளுக்காக முன்னோர்களால் கோவிலில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சுவாமிகளின் பெயரில் கொடுக்கப்பட்டது. அந்த சொத்துக்களை எக்காரணம் கொண்டும் விற்கவோ, ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்களுக்கு பட்டாவோ வழங்கக் கூடாது. தமிழக அரசு ஆலய நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கே பட்டா செய்து கொடுக்க இருப்பதாக நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கில் அரசு தாக்கல் செய்து உள்ள பிரமாண வாக்குமூலத்தில் கூறி உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கினால் அது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தும். எனவே பட்டா வழங்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செவிலிய உதவியாளர்கள் நலச்சங்கத்தினர் அதன் செயலாளர் சுரேஷ் ராஜா தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலிய உதவியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆர்வம் உள்ள அனைத்து தனியார் செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்றவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும், திருச்சி மாவட்ட கலெக்டர் மூலம் பணி வாய்ப்பு வழங்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

5 வயது மாணவி

துறையூர் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக செம்மண், கிராவல் அள்ள தடைவிதித்து இருப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் தடையை நீக்கி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். கருமண்டபம் விஸ்வாஸ் நகர் விஸ்தரிப்பு சோழகர் நகரை சேர்ந்த சத்ய பிரியா என்ற 5 வயது மாணவி தனது தந்தையுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் தனது வீட்டின் எதிரில் உள்ள பொது பாதையில் கழிவு நீர் தொட்டி அமைத்து இருப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ரூ.20 லட்சம் கேட்டு மனு

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த ராக்கி எமல்சன் என்பவர் மேலப்புதூர் தனியார் பள்ளியில் ஆசிரியைகள் திட்டியதால் 3-வது மாடியில் இருந்து குதித்த தனது மகள் ஏஞ்சிலினா மெமோ இரு கால்களும் முறிந்து நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

Next Story