ஆசிரியர்களை நியமித்ததாக, ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் மோசடியா? தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர்களை நியமித்ததாக, ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் மோசடியா? தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-05T00:45:46+05:30)

ஆசிரியர்களை நியமித்ததாக ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் மோசடி நடைபெற்றுள்ளதா? என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரசுராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மதுரை,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 100 மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இதனால் மீதம் உள்ள 312 இடங்களிலும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன.

இதற்கான ஆசிரியர், கணினி பொருட்கள் உள்பட அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலை பட்டம் பெற்ற 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிக்கை தயார் செய்து அங்குள்ள தலைமை ஆசிரியர் மோசடி செய்துள்ளார். அவர் மீது புகார் செய்தும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீட் தேர்வு தோல்வியினால் பல மாணவர்கள் மனவருத்தம் அடைகின்றனர். இந்த சூழ்நிலையில் நீட் பயிற்சி மைய மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை இன்றைக்கு (5-ந்தேதிக்கு) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story