பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:45 AM IST (Updated: 5 Nov 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகளை முறையாக கணக்கிட்டு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 650-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தற்போது சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் பயன்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறிவிழுந்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் பயன்பாடு இல்லாமல் இருப்பதை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் பல்வேறு இடங்களில் பயன்படாத ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல் பயன்பாடற்று இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக மூடாமல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதேபோல இந்த தாலுகாவில் பல இடங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கும் போதே தரமாக அமைக்கப்படவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறுகள் சுமார் 1200 அடி ஆழத்திற்கு அதிகமாக அமைக்கப்பட்டும் அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படவில்லை. இதுபோன்று அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளனவா என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

திருவாடானையில் இருந்து மங்கலக்குடி செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் கிராமத்தின் அருகில் சாலையோரத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பாதுகாப்பாக மூடப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அரசின் உத்தரவை தொடர்ந்து பெயரளவில் சாக்கு பையால் மூடி முட்செடிகளை அதன் மேல் போட்டு வைத்துள்ளனர். இதேபோன்று குஞ்சங்குளம், தினைக்காத்தான்வயல், வெளியங்குடி கண்மாய் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் பாதுகாப்பாக மூடப்படவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- திருவாடானை தாலுகாவில் பயனில்லாத நிலையில் உள்ள ஏராளமான ஆழ்துளை கிணறுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்ட போது உப்பு தண்ணீராக இருந்த நிலையிலும், தண்ணீர் கிடைக்காமல் போன நிலையிலும் முறையாக மூடப்படாமல் அதை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் மூலமாக இந்த பகுதியில் மரணங்கள் ஏற்படாததால் இதன் பாதிப்பு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவில்லை. இனிவரும் காலங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகள் பற்றிய முறையான கணக்கெடுப்பை நடத்தி அதில் பயனில்லாமல் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story